இஸ்ரேலின் வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமர் பென்-க்விர் தலைமையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்திற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
யூதர்களின் ‘சுக்கோத்’ பண்டிகையின் மூன்றாவது நாளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இடமர் பென்-க்விர் உடன் நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகளும் அல்-அக்ஸா வளாகத்திற்குள் நுழைந்தனர். இந்தச் செயலை “தூண்டுதல் நடவடிக்கை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என்று ஐக்கிய அரபு இராச்சியம் வர்ணித்துள்ளது.
இதேவேளை, ஹெப்ரோனில் உள்ள இப்ராஹிமி பள்ளிவாசலிலும் இடமர் பென்-க்விர் குடியேற்றவாசிகளுடன் இணைந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே, அல்-அக்ஸா வளாகத்தில் ஊடகங்களிடம் பேசிய இஸ்ரேலிய அமைச்சர், “அல்-அக்ஸாவிலும் சிறைச்சாலைகளிலும் நாங்களே உரிமையாளர்கள்; பயங்கரவாதக் கைதிகளின் வாழ்க்கையை நரகமாக மாற்றியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.