டேட்டட் ப்ரென்ட் கச்சா எண்ணெய்க்கு எதிராக இந்தியத் துறைமுகங்களில் ரஷ்ய யூரல்ஸ் கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடிகள், ஒரு பீப்பாய்க்கு 10 டொலருக்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உலகச் சந்தையில் மாற்று எண்ணெய் விநியோகம் தாராளமாகக் கிடைப்பதும், சுத்திகரிப்பு நிலையங்களின் தேவை குறைந்திருப்பதுமே ரஷ்ய எண்ணெயின் விலை சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் காரணமாக, கடந்த மார்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் ரஷ்ய யூரல்ஸ் எண்ணெய்க்கான தேவை அதன் முக்கிய வாடிக்கையாளர்களான இந்தியா மற்றும் சீனாவில் அதிகமாக இருந்தது. இதனால் அப்போது ப்ரென்ட் கச்சா எண்ணெயை விட இது கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது.
ஆனால், தற்போது மத்திய கிழக்கு நாடுகளும் ஈரானும் தங்களின் எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் சீரமைத்துள்ளதால், ஆசிய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் பல புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதன் விளைவாக, ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான மவுசு சற்றே குறைந்துள்ளது.
குறிப்பாக, வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு வந்து சேர வேண்டிய ரஷ்ய யூரல்ஸ் கச்சா எண்ணெய் சரக்குகள், ஒரு பீப்பாய்க்கு 10 டொலர் அல்லது அதற்கும் அதிகமான அதிரடித் தள்ளுபடி விலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
இந்த அதீத விலை வீழ்ச்சியானது, ஈரான் மோதல்களுக்கு முன்பு இருந்த நிலையை ஒத்திருப்பதுடன், அண்மைக்காலத்தின் மிக மோசமான சரிவுக்கு மிக அருகில் உள்ளது.
அதேநேரம், சீனா தற்போது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளது. இதனால் ரஷ்ய எண்ணெயை சீனா வாங்குவது குறைந்திருப்பதும் இந்த விலை வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாகும்.
சர்வதேசக் தடைகளுக்குப் பிறகு, ரஷ்யா ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெயில் பெரும்பகுதியை இந்தியாவும் சீனாவும் மட்டுமே தொடர்ந்து இறக்குமதி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமன்றி, உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்களின் யூரல்ஸ் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெருக்கியுள்ளனர். சந்தையில் ரஷ்ய எண்ணெய் அளவுக்கு அதிகமாகக் குவிந்ததும் இந்த பெரும் தள்ளுபடிக்கு வழிவகுத்துள்ளது.
Discounts on Russian Urals crude oil at Indian ports have surged past $10 per barrel against Dated Brent due to weakened demand from Asian refiners and an abundance of alternative supplies from the Middle East. Additionally, lower domestic refining in Russia caused by Ukrainian drone strikes has led to record-high Urals exports, further driving down prices in its key markets, India and China.