Skip to main content

Super Tamils

காவல்துறை கெமரா கொள்வனவில் முறைகேடு…! மக்கள் போராட்ட இயக்கம் குற்றச்சாட்டு.

காவல்துறை அதிகாரிகளுக்காக 500 உடலில் அணியும் கெமராக்களைக் (Body-worn Cameras) கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திர நடவடிக்கையில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

நுகேகொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அந்த இயக்கத்தின் வசந்த முதலிகே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்தக் கேள்விப்பத்திரத்தின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளைத் தயாரிக்க ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும், அதிலுள்ள வடிவமைப்பு குறியீடுகள் கூட நீக்கப்படாமல் ஆவணத்தில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கேள்விப்பத்திரத்திற்கு நிறுவனங்கள் சமர்ப்பித்த விலை மனுக்களில் பெரும் இடைவெளி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட நிறுவனங்களின் விலை முன்மொழிவுகள் 5 கோடி ரூபாய் முதல் 36 கோடி ரூபாய் வரை பதிவாகியுள்ளன.

அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று சுமார் 17 கோடி ரூபாய் பெறுமதியான விலை முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ள நிலையில், அதே அரசு நிறுவனத்தின் துணை நிறுவனமாகச் செயற்படும் மற்றொரு நிறுவனம் சுமார் 6 கோடி ரூபாய்க்கு விலை முன்மொழிவை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

500 கெமராக்கள் மட்டுமே கொள்வனவு செய்யப்படுவது போதுமானதா அல்லது இது எதிர்காலத்தில் மிகப்பெரிய திட்டமாக விரிவுபடுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, தற்போதைய கேள்விப்பத்திர நடைமுறையைக் கைவிட்டு, முறையான தொழில்நுட்ப மதிப்பீட்டுடன் புதிய கொள்வனவு நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்று மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்