கனடா அரசு, அமெரிக்காவுடன் இணைந்து நடத்த திட்டமிட்டிருந்த Gordie Howe சர்வதேச பாலம் திறப்பு விழாவை திடீரென ரத்து செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்த புதிய வர்த்தக வரி நடவடிக்கையின் காரணமாகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெட்ராய்ட் (மிச்சிகன்) மற்றும் விண்ட்சர் (ஒன்ராறியோ) நகரங்களை இணைக்கும் இந்த முக்கியமான பாலம், வரும் ஜூலை 27, 2026 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட இருக்கிறது. ஆரம்பத்தில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளும் வகையில் ஒரு பிரம்மாண்டமான ரிப்பன் வெட்டும் விழா திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கனடா நாட்டுப் பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகம் அதிரடியாக அறிவித்ததால், அமெரிக்காவுடன் இணைந்து விழாவை நடத்துவதைத் தவிர்த்துவிட்டு கனடா அரசு தனியாகவே விழாவை நடத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கனடா உள்கட்டமைப்பு அமைச்சர் கிரேகர் ராபர்ட்சனின் செய்தித்தொடர்பாளர், தற்போதைய இத்தகைய பதற்றமான சூழலில் இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவது எந்த வகையிலும் பொருத்தமல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, கனடா வரும் ஜூலை 24 அன்று ஒரு தனிப்பட்ட எளிய விழாவை நடத்தி, அதில் ஊடகங்களை மட்டும் அழைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த அதிரடி வரி நடவடிக்கை, 1930-ஆம் ஆண்டுக்கான Tariff Act-இன் மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்படும் Section 338 சட்டத்தின் கீழ் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் (USMCA) முறையாகப் புதுப்பிக்கப்படாததால் இரு நாடுகளுக்குடையேயான வர்த்தக உறவுகள் மேலும் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளன.
இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள கனேடிய பிரதமர் மார்க் கார்னி, “இந்தத் தகாத வரிகள் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால், அதற்கு எவ்வாறு தக்க பதிலடி கொடுப்பது என்பது குறித்து நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இந்தப் பாலத்தின் பிரம்மாண்டமான கட்டுமான செலவுகள், அதன் உரிமை, மற்றும் சுங்கக் கட்டண வசூல் தொடர்பாகவும் கூட இரு நாடுகளுக்கும் இடையே பல மோதல்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டிருந்தன. கடந்த 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பாலம், சுமார் 4 பில்லியன் டொலர் பொருட்செலவில் கட்டப்பட்டதாகும்.
ஆரம்பக் காலக்கட்டத்தில் டொனால்டு ட்ரம்ப் கூட, இந்த பாலம் இரு நாடுகளுக்கும் இடையேயான மிக முக்கியப் பொருளாதார இணைப்பாகச் செயல்படும் என்று வெகுவாகப் பாராட்டியிருந்தார். ஆனால் தற்போதைய நிலையில், இந்த வர்த்தக மோதல்கள் காரணமாக, இந்தப் பாலத்தின் திறப்பு விழாவே இரு நாடுகளின் ராஜதந்திர உறவுகளில் புதியதொரு பிளவை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
Canada has abruptly cancelled a joint ribbon-cutting ceremony with the United States for the Gordie Howe International Bridge—scheduled for July 27, 2026—following President Donald Trump’s announcement of a 50% tariff on Canadian goods, prompting Ottawa to host a solo event on July 24 amid deepening trade tensions.