ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, சீன நிறுவனமான ‘மீடியா’ தயாரிக்கும் ‘போர்ட்டா-ஸ்பிலிட் வகை குளிரூட்டிகளுக்கு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளபடி தற்போது பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் பல நகரங்களில் கடந்த ஜூன் மாதத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகியுள்ளது. இந்த அதீத வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது.
அங்குள்ள பல பழைய மற்றும் பாரம்பரிய கட்டடங்களின் கட்டுமான அமைப்பு மிகவும் சிக்கலானது. சுவர்களைத் துளையிடுவதற்கோ அல்லது கட்டடத்தின் வெளிப்பகுதியில் பெரிய குளிரூட்டும் இயந்திரங்களை மாட்டவோ அங்கு கடுமையான சட்டக் கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த இக்கட்டான சூழலில், ‘போர்ட்டா-ஸ்பிலிட்’ குளிரூட்டிகள் ஜன்னல் வழியாகவே எளிதாகப் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தில் எந்தவித மாற்றமும் செய்யத் தேவையில்லை என்பதால், மக்கள் மத்தியில் இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தக் குளிரூட்டிகளின் அசல் விலை சுமார் 750 யூரோக்களாக இருந்தாலும், சந்தையில் தேவை உச்சத்தை எட்டியுள்ளதால் இருப்பு முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
தட்டுப்பாடு நிலவுவதால், ஆன்லைன் தளங்களில் இதன் விலை அசல் விலையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Due to extreme summer heatwaves in Europe, the Midea ‘PortaSplit’ air conditioner has become highly sought after because it can be installed through windows without violating strict building regulations. This high demand has led to inventory shortages and inflated resale prices on online platforms.